Saturday 10 September 2011

என்னுள் நீ

கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி:
வாலி வதை செய்யப்பட்டவுடன் அவன் மனைவி தாரை புலம்புகிறாள்:
''செருவார் தோள!நின்
சிந்தையேன் எனின்
மருவா வெஞ்சரம்
எனையும் எவ்வு மால்
ஒருவேன் உள் உனை
ஆகின உய்தியால்
இருவேம் உள் இரு
வேம் இருந்திலேம்.''
இப்பாடலின் பொருள்: உன் உள்ளத்தில் நான் இருக்கிறேன் என்றால் உன்னைக் கொன்ற பாணம் என்னையும் கொன்றிருக்க வேண்டும்.இப்போது,நான் மட்டும் இருக்கிறேன்.என்னுள் நீ இருக்கிறாய் என்றால் என்னைக் கொன்று தானே உன்னைக் கொன்றிருக்க வேண்டும்?நான் தான் உயிரோடு இருக்கிறேனே?அப்படியானால் நீயும் உயிரோடு இருக்க வேண்டும்.இல்லையே,நீ மாண்டு போய் விட்டாயே?
அப்டியானால் ஒருவரில் ஒருவர் மாறிப் புகுந்திருந்தோம் என்பது வெறும் வார்த்தை.
''இருவேம் உள் இருவேம் இருந்திலேம் ''என்பதில்,சோக பாவமும்,அழகு பாவமும் போட்டியிட்டு வெளிப்படுகின்றன.மரணத்திற்குக் கூட உயிர் ஊட்டி விட்டது கம்பனின் இலக்கியம்!.

தாஜ்மஹால்

ஒரு புதுக் கவிதை:
எனக்காக தாஜ்மஹாலைக் கூடக்
கட்டித் தருவதாகச் சொன்னான்.
நான் ஒரு தாலி மட்டும் கட்டச் சொன்னேன்.
ஷாஜஹானைக் காணவில்லை.........

அரசும் வேம்பும்

ராமநாதபுரம் சேதுபதியின் ஆஸ்தான வித்வானாக இருந்தவர் சிலேடைப்புலி என்ற பட்டம் பெற்ற வேம்பத்தூர் பிச்சுவையர் .ஒரு சமயம் புலவர் சபை கூடியது.எல்லா இருக்கைகளிலும்புலவர்கள் அமர்ந்து விட்டனர்.தாமதமாகப் பிச்சுவையர் வந்தார்.''வேம்புக்கு இங்கு இடம் இல்லையே!''என்று சேதுபதி வேடிக்கையாகக் கூறினார்.உடனே பிச்சுவையர்,''வேம்பு அரசின் அருகில் தானே இருக்கும்.''என்று கூறி சேதுபதியின் அருகில் போய் அமர்ந்து கொண்டார்.

அறிவில்லாதவன்

ஒரு புலவர்,தன மகனைப் பார்த்து,'அறிவில்லாதவனே,'என்று திட்டினார். அவனோ சிரித்துக் கொண்டேஇருந்தான்.புலவருக்கு இன்னும் கோபம் அதிகமாகிவிட்டது.''நான் உன்னை அறிவில்லாதவன் என்று கூறியும் கொஞ்சம் கூடவெட்கம் இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கிறாயே?''என்று கேட்டார்.மகன் சொன்னான்,''நீங்கள் என்னைப் பாராட்டும்போது எனக்கு எப்படிக் கோபம் வரும்?''புலவருக்கு திகைப்பு.மகன் சொன்னான் ,''அப்பா,நீங்கள் ஒரு புலவர்.நீங்களே என்னை அறிவில் ஆதவன் என்று சொல்லும்போது எனக்கு மகிழ்ச்சியே.''

யார் வாழ்ந்தார்?
கோவில் குருக்கள் சொன்னார்,
''திரு நீறிட்டார் தாழ்ந்தார்.இடாதார் வாழ்ந்தார்.''
கேட்டவர் திகைத்தார்.குருக்கள் விளக்கம் சொன்னார்,
''திருநீறு இட்டு யார் தாழ்ந்தார்?இடாது யார் வாழ்ந்தார்?''

நிலையாமை

வாழ்க்கையின் நிலையாமை குறித்து சித்தர்கள் பல பாடல்கள் எழுதியுள்ளனர்.அவற்றின் நோக்கம் வாழ்க்கையைக் கண்டு பயந்து ஓடுவதற்கு அல்ல .நம் வாழ்வில் நாம் நிதானத்துடன் நடந்து கொள்ள அவை பயன்படும் .இதோ ஒரு பாடல்:

அண்டங்காக்கை

புலவர் ஒருவர்,ஒரு அரசனைக் கண்டு அவன் புகழைப் பாடினார்.அரசனும் ஏதோ சன்மானம் அளித்தான்.புலவருக்கு அதில் திருப்தியில்லை.அரசனுக்கு தன பாடலை ரசிக்கக் கூடிய அளவுக்கு புலமை இல்லை என்று எண்ணி அவன் மீது அவருக்கு கோபம் வந்தது.அரசன் சரியான கருப்பு.புலவர் அரசனைப் பார்த்து,''அண்டங்காக்கைக்குப் பிறந்தவனே,''என்றார்.அரசனுக்கு கடுங்கோபம் ஏற்பட்டது உடனே வாளை உருவினான்.நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த புலவர் புன்முறுவல் பூத்த முகத்துடன் அரசனிடம் சொன்னார்,''அரசே,அண்டம் என்றால் உலகம்.காக்கை என்றால் காப்பதற்கு என்று பொருள் அதாவது நீ உலகத்தை ஆள்வதற்குப் பிறந்தவன் என்று சொன்னேன்.''அரசன் முகத்தில் இப்போது மகிழ்ச்சி.உடனே மேலும் பரிசுகளைப் புலவருக்குக் கொடுத்து அனுப்பினான்.

புதையல்

புலவர் ஒருவர் பாட்டிலேயே விடுகதை ஒன்று போட்டார்.அதற்குவிடை தெரிகிறதா என்று பாருங்கள்.
முற்பாதி போய்விட்டால் இருட்டே ஆகும்.
முன் எழுத்து இல்லாவிட்டால்,பெண்ணே ஆகும்.
பிற்பாதி போய்விட்டால் ஏவல் சொல்லாம்.
பிற்பாதியுடன் முன் எழுத்து இருந்தால் மேகம்.'
சொற்பாகக் கடைதலைசின் மிருகத்தீனி.
தொடர் இரண்டாம் எழுத்து மாதத்தில் ஒன்றாம்.
பொற்பார் திண்புய முத்து சாமி மன்னா!
புகலுவாய் இக்கதையின் புதையல் கண்டே!
விடை கண்டு பிடித்து விட்டீர்களா?விடைதான் கவிதையிலேயே இருக்கிறதே!ஆம்,புதையல் என்பதுதான் விடை.எப்படி?
புதையல் என்ற வார்த்தையில் முதல் பாதியை நீக்கிவிட்டால்இருப்பது அல்.அல் என்றால் இருள்.முதல் எழுத்து பு வை நீக்கி விட்டால் மிஞ்சுவது தையல்.தையல் என்றால் பெண்.இச்சொல்லின் பிற்பகுதியை எடுத்துவிட்டால் புதை என்னும் கட்டளைச் சொல் ஆகிவிடும்.பிற்பாதியோடு முதல் எழுத்து சேர்ந்தால் புயல் என்று வரும்.அதன் பொருள் மேகம்.முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் சேர்ந்தால் புல்.புதையலில் இரண்டாம் எழுத்து தை என்பது ஒரு மாதமாகும்.
புதையல் என்ற ஒரு சொல்லிலே எத்தனை பொருள் உள்ள வார்த்தைகள் உள்ளன என்ற அழகை அழகாகப் பாடியுள்ளார் புலவர்.

ஊரைக்கூட்டி ஒலிக்கஅழுதிட்டு
பேரை நீக்கி பிணமென்று பெயரிட்டு
சூறையங்காட்டிடையே கொண்டு போய் சுட்டிட்டு
நீரில் மூழ்கி நினைப் பொழிவரே.

அதாவது ஒருவன் இறந்துவிட்டால்,ஊரில் அனைவருக்கும் தகவல் சொல்லி விட்டு,சப்தம் போட்டு அழுதுவிட்டு.இதுவரை ஒரு பேர் சொல்லி அழைத்து வந்த அவருக்கு பிணம் என்று பெயரிட்டு,சுடுகாட்டிலே கொண்டு போய் பொசுக்கிவிட்டு,நீரில் முழுகிக் குளித்துவிட்டு அதோடு அவர் பற்றிய நினைப்பை ஒழித்துவிட்டு தம் வாழ்க்கையைப் பார்க்கப் போய் விடுவார்கள்.

விடுகதை

ஔவையாரை அவமதிக்க நினைத்த கம்பர்,அவரிடம் ஒரு விடுகதை போடும் சாக்கில்,'அடி' என்று அழைக்கிறார்.அது,'ஒரு காலில் நாலிலைப் பந்தலடி'என்பதாகும்.அதாவது,'நாலு இலைகளைப் பந்தலாகவும் ஒரு கம்பத்தை அடிக்காலாகவும் உடையது எது?'என்பது விடுகதை.
ஔவையார் என்ன சாதாரணமான புலவரா?அவர் அதற்கு பதில் சொல்லுமுகத்தான் கம்பரை,'அடா'என்று அழைக்க விரும்பினார்.
எட்டேகால் லட்சணமே எமன் ஏறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே-முட்டமேல்
கூரையில்ல வீடே,குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது?
அவலட்சணமே!எமன் ஏறி வருகின்ற எருமைக்கடாவே!மூதேவியே!கழுதையே!கூரையில்லாகுட்டிசுவரே!
குரங்கே!உன் விடுகதைக்கு பதில்,''ஆரைக்கீரையடா!''என்று கொட்டித் தீர்த்தார்.கம்பர் ஒரு முறை அடி என்று அவமதித்ததற்கு எத்தனை பெரிய அவமதிப்பு?எப்படியோ,அவ்விருவருக்கும் இடையில் இருந்த பிரச்சினை நமக்கு ஒரு நல்ல பாடலைக் கொடுத்துள்ளது.

இகழ்ச்சி

தமிழில் முதல் நாவலை எழுதியவர் வேதநாயகம் பிள்ளை.அவரிடம் பணம் பெறும் பொருட்டு அவரைப் பார்க்க வந்த ஒரு புலவர் அவரைப் பார்த்து,
,''அருங்கிரியே,கற்பகமே,காளையே,அனந்தனே,அரியே!''என்று புகழ்ந்தார். அவனுடைய நோக்கத்தைப் புரிந்து கொண்ட பிள்ளை அவர்கள் அவன் சொன்ன வார்த்தைகளை அலங்காரம் ஏதுமில்லாமல்அவனைப்பார்த்து திரும்பச் சொன்னார்.ஆனால் அந்த புலவர் மிகுந்த கோபத்துடன் வெளியேறிவிட்டார்.அப்படி அவர் என்ன தான் சொல்லி விட்டார்?
புலவர் அருங்கிரியே என்றார்.அதாவது அருமையான மலை போன்றவனே.கற்பகமே என்றார்.அதன் பொருள் நினைத்ததைத்தரும் கற்பக மரத்தைப் போன்றவனே என்பதாகும்.சிவனின்வாகனம் காளை.எனவே காளை போன்ற ஆற்றல் உடையவனே என்று புகழ்கிறார்.அனந்தன் என்பது திருமால் அமர்ந்திருக்கும் ஆதிசேடன் ஆகும். அரி என்றால் சிங்கம்.சிங்கம் போன்றவனே என்று சொல்கிறார்.
சரி,வேதநாயகம் பிள்ளை என்ன சொன்னார்?இதோ அவரது பாடல்.
அருங்கிரியே!கற்பகமே! காளையே!
அனந்தனே!அரியே!என்ன
ஒருங்கு நமையே புகழ்ந்து பொருள்கேட்ட
ஒருவனை யாம் உற்று நோக்கி
இருங்கல்லே!மரமே!மாடே!பாம்பே!மிருகமே!
என்றோம்;காய்ந்தான்
மருங்க வன் வார்த்தையைத் திருப்பி நான் சொன்னால்,
அவனுக்கு ஏன் வருத்தம் அம்மா?
புலவர் அருமையான மலை என்றார்.மலை என்பது கல்தானே.கற்பகம் ஒரு மரம்தானே!காளை என்பது மாடு தானே!அனந்தன் என்பது பாம்பு தானே! சிங்கம் ஒரு விலங்கு தானே.எனவே புலவர் சொன்னதையே திருப்பி,''கல்லே,மரமே,மாடே,பாம்பே,மிருகமே,''என்று சொன்னபோது அவர் கோபம் கொண்டார்.

அப்பா எங்கே?

'உங்கப்பா எங்கே?'என்று ஒரு பெரியவர் கேட்க,பெண் பதில்
சொன்னாள்,''வீட்டில் நிறைய பிணம் சேர்ந்து விட்டதால் அதை விற்கப் போயிருக்கிறார்.''பெரியவர் கேட்டார்,'ஓஹோ,கருவாடு விற்கப் போயிருக்கிறாரா?'
அடுத்து நின்ற பெண்ணிடம் அவளுடைய அப்பா பற்றி விசாரிக்க அவள் சொன்னாள்,''எங்கப்பா சுட்ட பிணத்தை மீண்டும் சுட சுட்ட பிணத்தைஎல்லாம் எடுத்துக் கொண்டு விற்கப் போயிருக்கிறார்.'' பெரியவரும்,'அப்படியா,அடுப்புக்கரி விற்கப் போயிருக்கிறாரா?சரி,நான் பிறகு வருகிறேன்.'என்று கூறிச் சென்றார்.

எப்போது வரலாம்?

ஒருவன் ஒரு பெண்ணைக் கண்டவுடன் காதலித்தான்.அவளிடம் தன விருப்பத்தைக் கூற நினைத்தான்.அவள் தினசரி கடை வீதி வழியே செல்வதுண்டு.அனால் கூடவே அவளுடைய தந்தையும் வருவார்.அவர் வராத ஒரு நாள் பார்த்து அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்தான்.பல நாள் காத்திருந்ததன் பலனாக ஒரு நாள் அவள் தனியே வந்தாள்.நேரடியாக விசயத்தைச் சொன்னால் அதில் என்ன ஆவல் நிறைவேறும்?எனவே அவளைப் பார்த்து சொல்கிறான்:
ஒரு மரம் ஏறி,ஒரு மரம் பூசி
ஒரு மரம் பிடித்து,ஒரு மரம் வீசிப்
போகிறவன் பெண்ணே,உன்
வீடு எங்கே?
அதன் பொருள்:ஒரு மரமாகிய பாதக் குறட்டுக் கட்டையின் மேலே ஏறி
(அந்தக் காலத்தில் செருப்பு மரத்தாலானதாக இருக்கும்.) ஒரு மரமாகிய சந்தனத்தைப் பூசிக் கொண்டு,ஒரு மரமாகிய கைத்தடியைப் பிடித்துக் கொண்டு,ஒரு மரமாகிய பனை ஓலை விசிறியை வீசிக் கொண்டு செல்பவரின் பெண்ணே,உன் வீடு எங்கே இருக்கிறது?
அவன்பேசிய பேச்சின் உட்கருத்தை அவள் புரிந்து கொண்டாளா? புரிந்து கொண்டதனால் உடனே பதில் இதோ சொல்லி விட்டாளே!
பாலுக்கும் பானைக்கும் நடுவிலே
ஊசிக்கும் நூலுக்கும் அருகிலே
அவன் ஒரு நிமிடம் யோசித்தான்.அவனும் புரிந்து கொண்டான்.அதாவது அவள் வீடு பால் விற்கும் இடையன் வீட்டிற்கும்,பானை செய்யும் குயவன் வீட்டிற்கும் நடுவிலேயும்,ஊசி செய்யும் கொல்லன் வீட்டிற்கும்,நூலைக் கொண்டு நெசவு செய்யும் நெசவாளியின் வீட்டிற்கும் அருகில் இருக்கிறது.
அடுத்து அவன்,அவள் வீட்டிற்கு எப்போது வரலாம் என்று கேட்கிறான்.
அவள் சொல்கிறாள்:
இந்த ராஜா செத்து
அந்த ராஜா பட்டம்
கட்டிக் கொண்டு மரத்தோடு மரம்
சேர்ந்த பிறகு வந்து சேர்
அதாவது கதிரவன் மறைந்து,சந்திரன் உதயமான பிறகு,வீட்டில் உள்ளவர்கள் கதவைச் சாத்தும் போது,கதவு நிலையும் கதவும் சேர்ந்து விடும்.அந்த சமயத்தில் அதாவது நள்ளிரவில் வருவாயாக என்று தெரிவிக்கிறாள் காதலி.
இனிப்பேச்சு எதற்கு?

மூவருக்கு இரு கால்

ஒரு கணவன் எதோ வருத்தத்தில் தன மனைவி மேல் கோபித்துக் கொண்டு அடித்துத் துரத்தி விட்டான்.முன் கோபத்தால் அப்படிச் செய்து விட்டாலும் பிறகு அவளைத் தேடிக் கொண்டு புறப்பட்டான்.வழியிலே ஒருவனைக் கண்டு,
''ஆற்றுக்குக்குப் பகையாய் இருக்கும் மரத்தின் கீழே இருந்து
வேலியைப் படல் கட்டுகிறவனே!
மூவர் இரு காலால் நடக்கக் கண்டாயோ?''என்று கேட்டான்.
அதற்கு அவன் விடை சொல்கிறான்,
''அவள் செத்து மூன்று நாள் ஆச்சு;
அவளைக் கொன்றவன் செத்து
ஆறு நாள் ஆச்சு;
அவளைச் சுட்டவன் செத்து
ஆறு மாசம் ஆச்சு'' என்று சொன்னான்.
நெசவுகாரன் ஒருவன் தேற்றா மரத்தின் கீழ் பாவு போட்டிருந்தான்.அவனைப் பார்த்து தான் கணவன் கேட்கிறான்.'ஆற்றுக்குப் பகை' என்றது,கலங்கல் நீரைத் தெளியச் செய்யும் கொட்டையைத் தரும் தேற்றா மரத்தை. மனிதர்,வேலியைப்போலச் சுற்றி உடுக்கும் ஆடையின் பொருட்டுப் பாவு ஓட்டுபவன் என்பதை,'வேலிக்குப் படல் கட்டுகிறவனே'என்று குறிப்பிட்டான்.தன மனைவி இடுப்பில் ஒரு குழந்தையையும்,வயிற்றில் ஒரு குழந்தையையும் சுமந்து சென்றாள் என்பதை,'மூவர் இரு காலால் நடக்கக் கண்டாயோ'என்று கேட்கிறான்.
அவள் இடையில் ஓரிடத்தில் தண்ணீர் குடித்த போது, அந்தத் தண்ணீரில் ஆறு நாளாகச் செத்துக் கிடந்த சிறு பாம்பின் விஷத்தால் இறந்தாள்.ஊரார்,ஆறு மாதத்துக்கு முன் வெட்டி உலர்த்தின மரத்தின் விறகைக் கொண்டு அவளைத் தர்மத்திற்கு எரித்து விட்டார்கள்.இதையே அந்த நெசவுகாரன்,அவள் செத்து மூன்று நாள் ஆச்சு.அவளைக் கொன்றவன் (பாம்பு )செத்து ஆறு நாள் ஆச்சு.அவளைச் சுட்டவன் (மரம்) செத்துஆறு மாசம் ஆச்சு''என்று குறிப்பிடுகிறான்

நாடோடிப்பாடல்

நாடோடிப்பாடல்கள் மனித உணர்வுகளை அழகாக,தெளிவாகக் காட்டுகின்றன.காதல்,வீரம்,நகைச்சுவை அனைத்தையும் உள்ளடக்கியவை.இலக்கண வரம்பை மீறியவை.கற்பனை வளம் கொண்டவை.இதோ,ஒரு பாடல்;

முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டி வச்சேன்.
ரெண்டு குளம் பாழு;ஒண்ணு தண்ணியே இல்லை.
தண்ணியில்லாக் குளத்துக்கு வந்த குசவர் மூணு பேரு.
ரெண்டு பேர் மொண்டி-ஒத்தன் கையே இல்லை.
கையில்லாத குசவன் வனைந்த சட்டி மூணுசட்டி
ரெண்டு சட்டி பச்சை-ஒண்ணு வேகவேயில்லை.
வேகாத சட்டியிலே போட்ட அரிசி மூணு அரிசி.
ரெண்டரிசி நறுக்கு-ஒண்ணு வேகவேயில்லை.
வேகாத சோற்றுக்கு மோர் கொடுத்தது மூணு எருமை.
ரெண்டெருமை மலடு-ஒண்ணு ஈனவே இல்லை..
ஈனாத எருமைக்கு விட்ட காடு மூணு காடு.
ரெண்டு காடு சொட்டை-ஒண்ணில்,புல்லே இல்லை.
புல்லில்லாக் காட்டுக்குக் கந்தாயம் மூணு பணம்.
ரெண்டு பணம் கள்ள வெள்ளி-ஒண்ணு செல்லவே இல்லை.
செல்லாத பணத்துக்கு நோட்டக்காரர் மூணு பேரு.
ரெண்டு பேரு குருடு-ஒத்தனுக்குக் கண்ணே இல்லை.
கண்ணில்லாக் கணக்கப் பிள்ளைக்கு விட்ட ஊருமூணு ஊரு.
ரெண்டு ஊரு பாழு-ஒண்ணில் குடியே இல்லை.
குடியில்லா ஊரிலே குமரிப் பெண்கள் மூணு பேரு.
ரெண்டு பேரு மொட்டை-ஒத்திக்கு மயிரே இல்லை.
மயிரில்லாப் பொண்ணுக்கு வந்த மாப்பிள்ளை மூணு பேரு.
ரெண்டு பேரு பொக்கை-ஒத்தனுக்குப் பல்லே இல்லை..

போய் விடும்

ஒரு அழகான தனிப் பாடல்;
தாயோடு அறுசுவை போகும்.
தந்தையோடு கல்வி போகும்
குழந்தைகளோடு பெற்ற செல்வப் பெருமை போகும்.
செல்வாக்கு உற்றாரோடு போகும்.
உடன் பிறந்தாரோடு தோல் வலிமை போகும்.
பொன் தாலி அணிந்த மனைவியோடு எல்லாமே போய் விடும்.

மரம்

ஒரு பழைய பாடல்;
மரமது மரத்தில் ஏறி மரமதை தோளில் சுமந்து
மரமது மரத்தைக் கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி
மரமது வழியே சென்று வலைமனை வரும்போது
மரமது கண்ட மாதர் மரமோடு மரம் எடுத்தார்.

இதன் பொருள்;
மரமது மரத்தில் ஏறி =அரசன் (அரச மரம்) மரத்தினால் செய்த தேரில் ஏறி
மரமதைத் தோளில் சுமந்து =மூங்கில் மரத்தை வளைத்து செய்யப்பட வில் அம்புகளை சுமந்து வேட்டைக்குப் போகிறான்.
மரமது மரத்தைக் கண்டு=அரசன் ஒரு வேங்கையை(வேங்கை மரம்)
பார்த்தான்.
மரத்தினால் மரத்தைக் குத்தி=மரப்பிடி கொண்ட ஈட்டியால் அவ்வேங்கையைக் குத்திக் கொன்றான்.
மரமது வழியே சென்று=காட்டு வழியே தொடர்ந்து சென்றான்.
வலைமனை வரும்போது=அரண்மனை திரும்பும் போது
மரமது கண்ட மாதர்=அரசனை,அரசனின் தேரைப் பார்த்த மக்கள்
மரமோடு மரம் எடுத்தார்=ஆலத்தி(ஆல்,அத்தி)எடுத்தனர்.

Saturday, January 8, 2011

ஒரே பதில்

வள்ளல் ஒருவர் புலவரிடம் வரிசையாக நான்கு கேள்விகள் கேட்டார். புலவர் நான்கு கேள்விகளுக்கும் பதிலாக ஒரே வரியில்,'திருவேங்கடநாதா,'என்றார்.
அதன் விளக்கம்:
புலவரே,உம்மிடம் இல்லாததென்ன? ----திரு (செல்வம்)
உம்மிடம் இருப்பதென்ன? ----வெம் கடன்
உம சொற்பான்மை என்ன? ----நா (நாக்கு)
செய் தொழில்யாது? ----தா(தா,தா என்று வள்ளல்களை
கேட்பது)

கொடியது

மார்கழிக் குளிரில் புலவர் ஒருவர் நடுங்கியபடி அமர்ந்திருந்தார்.அப்போது இன்னொரு புலவர் சால்வையுடன் வந்தார்.முதல் புலவர் சொன்னார்,''பனிக் காலம் கொடியது,''இரண்டாவது புலவர் சொன்னார்,'பனிக்காலம் நன்று.' முதல் புலவர் சற்று யோசித்து,''ஆமாம்,பனிக்காலம் நன்று,'என்றார். அருகில் இருந்தவருக்கு ஒரே குழப்பம்.முதல் புலவர் தன கருத்தை வேகமாக மாற்றிக் கொண்டதற்கான காரணத்தை வினவினார்.அவர் சொன்னார்,'இருவரும் ஒரே கருத்து தான் கொண்டிருக்கிறோம்.'அருகில் இருந்தவருக்கோ குழப்பம் அதிகரித்தது.குறிப்பறிந்து முதல் புலவர் சொன்னார்,''நான் பனிக்காலம் கொடியது என்றேன்.அவர் பனிக்கு ஆலம் நன்று என்றார்.ஆலம் என்றால் விஷம்.அதாவது பனியைக் காட்டிலும் விஷம் பரவாயில்லை என்கிறார்.அவ்வளவு பனிக்கொடுமை.''

பத்துக்கால்

பத்துக்கால் மூன்று தலை
பார்க்கும் கண் ஆறு முகம்
இத்தலையில் ஆறு வாய்.
ஈரிரண்டாம் -இத்தனையும்
ஓரிடத்தில் கண்டேன்!.
உவந்தேன்!களி கூர்ந்தேன்!
யாரிடத்தில் கண்டேன்,பகர்.
இப்பாடல் வயலில் உழுது கொண்டிருந்த விவசாயியைப் பார்த்துப் பாடப்பட்டது.
பொருள்: உழுது கொண்டிருந்த இரண்டு மாட்டுக்கும் எட்டு கால்;உழவனுக்கு
இரண்டு கால்;மொத்தம் பத்து கால்.
மாடுகளின் தலை இரண்டு;உழவனின் தலை ஒன்று;மொத்தம் மூன்று தலை.ஆறு கண்கள்.
மாடுகளின் முகம் இரண்டு;உழவனின் முகம் ஒன்று;அப்போது வெயில் ஏறும் நேரம்,எனவே ஏறுமுகம் ஒன்று;ஏர் முகம் ஒன்று;உழுகிற கொழுமுகம் ஒன்று;ஆக மொத்தம் ஆறு முகம்.
மாடுகளின் வாய் இரண்டு;உழவனின் வாய் ஒன்று;கொழு வாய் (கலப்பை நுனி ) ஒன்று ;மொத்தம் நான்கு வாய்.(ஈரிரண்டுநான்கு)

முறையீடு

ஒரு புலவர் வறுமையில் வாடியதால் பல இடங்களுக்கும் அலைந்து ஒன்றும் கிடைக்காமல் இல்லம் திரும்புகையில் வழியில் ஒரு சிவன் கோவிலைக் கண்டு ஆண்டவனிடம் முறையிடலாம் என்று உள்ளே சென்றார்.அங்கு கோவிலின் சுவற்றில் திருவிளையாடல் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன.ஒரு சித்திரம் சிவலிங்கத்தை ஒரு வேடன் காலால் உதைக்கும் ஓவியம்.அடுத்து வேடன் உருவிலிருந்த சிவனை அர்ச்சுனன் அம்பினால் எரியும் காட்சி.அடுத்து பிட்டுக்கு மண் சுமந்த சிவன் பாண்டியனிடம் பிரம்படி வாங்கும் காட்சி.புலவர் சிரித்துக்கொண்டே தனக்குத்தானே பாடினார்,
''வஞ்சகர்பால் நடந்தலைந்த காலால் புண்ணும்
வாசல்தொறும் முட்டுண்ட தலையில் புண்ணும்
செஞ்சொல்லை நினைந்துருகும் நெஞ்சில் புண்ணும்
தீருமென்று சங்கரன் பால் வந்தேனப்பா!
கொஞ்சமல்ல பிரம்படியின் புண்ணும்,வேடன்
கொடுங்காலால் உதைத்த புண்ணும்,கோபமாகப்
பஞ்சவரில் ஒருவன் வில்லால் அடித்த புண்ணும்
பாரென்று காட்டி நின்றான் பரமன் தானே!''

ஆட்டுக்கு இருபது கால்

''கொம்பிலிருக்கும் குரங்குக்கோர் வாலிரண்டு;
கம்ப மத யானைக்குக் கால்கள் எட்டு-செம்பமலைக்
காட்டில் திரியும் கரடிக்கோர் வாயைந்து
ஆட்டுக்கு இருபது கால்.''
தப்பும் தவறுமாய் இருக்கும் இது ஒரு பாட்டா எனக் கேட்கிறீர்களா? சரியான பதில் தெரிய பதம் பிரித்து குறியீடு போட்டு கீழே உள்ளது போல் எழுத வேண்டும்.
''கொம்பிலிருக்கும் குரங்குக்கு ஓர் வால்;
இரண்டு கம்ப மத யானைக்குக் கால்கள் எட்டு;
செம்பமலைக் காட்டில் திரியும் கரடிக்கோர் வாய்;
ஐந்து ஆட்டுக்கு இருபது கால்.''

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.