அலெக்ஸொந்தர் கிரஹாம்பெல் குறித்து இன்னொரு செய்தி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். தந்திகள் வழியே செய்திகள் அனுப்புவது எப்படி என்பது அவர் அடிமனதில் இருந்த கேள்வி. அவர் சிறந்த பியானோ கலைஞர்.
ஒரு பியானோவை இசைத்த போது மற்றோர் அறையில் இருந்த பியானோ அதே இசையை எதிரொலித்தது. கம்பியின் அதிர்வுகளைக் காற்றில் ஏற்றி அனுப்பமுடியும் என்பதை அவர் உணர்ந்தார். தொலைபேசியைக் கண்டுபிடிக்க இது மிகவும் துணை செய்தது. கலைகளில் இருக்கும் ஈடுபாடு, உங்கள் ஆராய்ச்சித் திறமையை அதிகரிக்கும் என்பதற்கு இதைவிடவும் சான்று வேண்டுமா என்ன?
என்ன பெரிய புடலங்காய்
ஏதாவது சொன்னால், “என்ன பெரிய புடலங்காய்” என்பது வழக்கம். இதற்கொரு காரணமுண்டு. சிலருக்கு, சின்ன வயதில் புடலங்காய் பிடிக்காது. வளர்ந்த பிறகும் அதே வெறுப்பு நீடிக்கும். நெருக்கமான யாராவது “சாப்பிட்டுப் பாருங்களேன்” என்று வற்புறுத்தியதும் சுவைத்துப் பார்த்தால் பிடித்துப் போகும்.
விழுங்கச் சிரமம் என்று நினைத்த புடலங்காய் விருப்பமானதாய் மாறும். இதேபோலத்தான் வாழ்வில் சில விஷயங்களை நம்மால் ஆகாது என்று நினைத்து விட்டிருப்போம். ஆனால் பின்னால் முயன்று பார்த்தால் அவை நமக்கேற்றதாகவும் நல்லவையாகவும் தெரியும். “என்ன பெரிய புடலங்காய்” என்று எதையும் தள்ளாதீர்கள். முயன்று பாருங்கள்
சாதனைக்கு
நல்ல நோக்கம் ஒன்று நிலையான சாதனைக்கு அடித்தளமாய் அமைகிறது. காது கேளாதவர்களுக்குத் துணைசெய்யும் நோக்கில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவர் அதன் நீட்சியாகத் தொலைபேசியைக் கண்டு பிடித்தார்.
அலெக்ஸாந்தர் கிரஹாம்பெல் ஓர் ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல. தீர்க்கதரிசியும்தான். தொலைபேசி கண்டுபிடித்த பிறகு தன் தந்தைக்கு அவர் எழுதிய கடிதத்தில், “தண்ணீர் இணைப்பு எரிவாயு இணைப்பு போல என் தயாரிப்பு வீட்டுக்கு வீடு இடம்பெறும்” என்று குறிப்பிட்டிருந்தார். ஒரு கனவு – ஒரு கண்டுபிடிப்பு இரண்டுக்கும் பயன் கருதாத அணுகுமுறையே பாதையிட்டது
ஆசிரியை,
தன் கணவனை திடீர் மாரடைப்பில் பலிகொடுத்த அந்த ஆசிரியை, வாழ்வின் நுட்பத்தை அந்த இழப்பில் உணர்ந்தார். ஒரு வாரத்திற்குப் பிறகு வகுப்பில் மாணவர்களிடம் சொன்னார், “வாழ்க்கை என்பதே நேசிப்பதற்கும், உணர்வதற்கும், பகிர்வதற்கும் தரப்பட்டுள்ள வாய்ப்பு. இது எத்தனை காலம் நீடிக்குமோ தெரியாது. ஒவ்வொரு நாளும் வாழ்வின் சில அழகான அம்சங்களை உணருங்கள்.
காற்றில் தவழும் நறுமணம், கண்களில் தென்படும் பூக்கள், எங்கோ கேட்கும் இசை, கடந்து போகும் குழந்தை, எல்லாவற்றையும் நேசியுங்கள்” என்றார். அதன்பிறகு வாழ்க்கை அனுபவமே புதிதாக இருப்பதை உணர்ந்த அவரின் மாணவர்கள், உயிர்ப்பும், அன்பும் நிறைந்த மனிதர்களாய் மலர்ந்தார்கள். வாழ்வென்னும் பாடத்தைப் புரியவைத்த அந்த ஆசிரியையை நாளெல்லாம் நினைவில் கொண்டார்கள்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.