Saturday, 26 November 2011

எங்கும் வெற்றி எதிலும் வெற்றி!

எங்கும் வெற்றி எதிலும் வெற்றி




சீனாவில் அப்பெரியவருக்கு ஒரு யோசனை தோன்றியது. தன் வாழ்நாள் முழுதும் அந்த பெரிய மலையின் மறுபுறமாக செல்ல பல நாட்கள் நடக்க வேண்டியதாகிவிட்டது.

மலையில் நடுவில் ஒரு குகையை அமைத்தால் ஒரு சில நிமிடங்களில் மறுபுறத்திற்கு எல்லாமே – இதுதான் யோசனை.

மலையை குடைய ஆரம்பித்தார்.

அதைப்பார்த்த மற்றவர்கள் ஏளனம் செய்தனர்.

“ஏன் பெரியவரே! உன்னால் நடக்கக்கூட முடியவில்லை. இந்த நிலையில் பெரிய மலையைக் குடைவது சாத்தியமா? அதுவும் மலையின் மறுபுறம் வரையில் குடைந்து சாலையை போட முடியுமா? என்று வினவினார்.

பெரியவர் சொன்னார் “இந்த மலையை நான் உடைத்த வழி செய்ய முடியும். ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

நான் இறந்து விட்டதும் என்னுடைய பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் என தொடர்ந்து இதைச் செய்வார்கள். ஒரு நாள் மலையைக் குடைந்து முடித்து சாலை உருவாகியே தீரும். ஆனால் இந்த மலை வளராது” – என்று உறுதியாக சொன்னார்.

இச்செய்தி மன்னருக்கு எட்டியது.

பல்லாயிரக்கணக்கான ஆட்களை அனுப்பினார்.

மலையைக் குடைந்தனர்.

சாலைப் பிறந்தது.

பெரியவரின் யோசனை செயல்பட்டுவிட்டது.

மலையின் ஒருபுறமிருந்து மறுபுறம் செல்வது எளிதாகி விட்டது.

மலையையே நகர்த்தி விட்டார், பெரியவர்.

மேலும் சில நடைமுறைகளைப் பார்ப்போம்.

பிரெஞ்சு நாட்டை ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைய செய்த பெண்மணிக்கு, அந்த யோசனை தொடங்கிய வயது 19.

கண் தெரியாத, காது கேளாத, ஊமையான ஹெலன் ஹில்லர் பல நூல்களை எழுதி, குருடர்கள் படிப்பதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்கி நோபல் பரிசை பெற்றார்.

நான்கு வயதில் கண் பார்வையை இழந்த மேத்தா பல நூல்களை எழுதி சாதனைப் படைத்தார்.

கால்களை இழந்த டக்லாஸ் பாடன், இரண்டாம் உலகப்போரில் சாதனைப் படைத்த விமானியானார்.

இன்று உலகம் வளர்ந்துளது என்றால் அதற்குக் காரணம் இயலாத நிலையலிருந்து பலர் சாதனைப் படைத்ததுதான்.

முடியும் என்று நம்பினால் அதற்கான வழிமுறைகள் பிறக்கும். முடியாது என நினைத்தால் அதற்கான காணங்கள் கிடைக்கும்.

நம்பிக்கை உறுதியாக இருந்தால் மலையையும் நகர்த்த முடியும்.


அறிவு வளம் தொடர் வெற்றிக்கு அடித்தளம்




அறிவுச்சுடர் ஒளிரட்டடும்
அறியாமை விலகட்டும்
தொடர் முயற்சி தொடரட்டும்
வாழ்வெல்லாம் வெற்றி மலரட்டும்

வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பதற்கு அறிவு வளமே அடிதளம். அறிவின் எல்லை விரியும்போது உங்களுடைய வாழ்வின் எல்லையும் விரிகின்றது. அதைத்தான் வளர்ச்சி என்று குறிப்பிடுகின்றோம். ஆக்கப்பூர்வமாக சிந்ததிப்பதன் விளைவுதான் முயற்சியும் அதனால் கிடைக்கும் வளர்ச்சியும் என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை இருக்கும்போது, பணி முன்னேற்றம், பதவி உயர்வு போன்றவைகளைப் பெறுவதற்கு எவ்வளவு தூரம் விரைவாகவும், கூடுதலாகவும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள். அறிவு வளர்ச்சியின் அவசியம் புரியும். ஆகவே புதிய அறிவை வளர்த்துக் கொள்ள மனதை எப்பொழுதும் திறந்து வையுங்கள்.

சுய இயக்கம் தேவை

வாய்ப்பு வரும்போது கற்றுக்கொள்ளலாம் என்ற சராசரி மனநிலையிலிருந்து சற்று மாறி, மனதை சுயமாக இயக்கி புதியனவற்றைக் கற்று அறிவு வளத்தைப் பெருகிக்கொள்ளும் சுயமுன்னேற்ற மனிதராக நீங்கள் மாற வேண்டும். ஏனென்றால் வளர்ச்சி என்பது வாழ்வின் தத்துவம். முயற்சியே வளர்ச்சிக்கான வழியாகும். தொடர்ந்து முயல்பவர்கள் மென்மேலும் வளர்ந்து வளம் பெறுகின்றார்கள். சூழ்நிலையைக் குறை கூறிக்கொண்டு, முடங்கிக் கிடப்பவர்கள் விரக்தியின் மடியில் சோகக் கனவுகளாகின்றார்கள். தொடர்ந்து முயல்பவர்களே வெற்றி வானில் மகிழ்ச்சிச் சிறகுகளை விரிக்கின்றார்கள்.

வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் புதுப்புது பாடங்களைக் கற்றுக் கொண்டு, அதை முதலீடு செய்து தொடர்ந்து முன்னேறுபவர்களே ஒரு நிறுவனத்தின் நிலையான பலமாக அமைகின்றார்கள். மேலும் உங்களுக்குக் கிடைத்துள்ள பதவியையும், அந்தஸ்தையும் தக்க வைத்துக் கொள்வதற்கு தொடர்ந்து முயன்று கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், தொடர்ந்து முயற்சி செய்யாதவருக்கு வெற்றியும், தொடர்ந்து முயற்சி செய்பவருக்கு ஏற்பட்ட தோல்வியும் நிலையானது அல்ல. ஆகவே, தொடர்ந்து முயலும் இயல்புடைய மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் தொழிற்போட்டிகளை வென்று உங்கள் நிறுவனத்தால் நிலைத்து நிற்க முடியும். நிறுவனம் நிலைத்தால்தான் அதில் பணிபுரியும் உங்களுடைய பணியும் அதனைச் சார்ந்த உங்களுடைய வாழ்வும் நிலைக்கும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

ஒவ்வொரு நாளும் வளருங்கள்

வெற்றியை நோக்கி தினமும் ஒரு சிறு அடியையாவது எடுத்து வையுங்கள். அத்துடன் உங்களுடைய அறிவு வளர்ச்சிக்காக சிறு முயற்சியையாவது மேற்கொள்ளுங்கள். அதாவது நீங்கள் செய்யும் பணி சம்மந்தமாக ஏதாவது ஒரு புதிய கருத்தை அல்லது நுட்பத்தை ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளுங்கள். மேலும் சுய முன்னேற்றம் சம்பந்தமான கட்டுரைகள் அல்லது நூலின் ஒரு பக்கத்தையாவது படியுங்கள். உலகம் வேகமாக மாறிக்கொண்டே இருக்கின்றது. அதன் காரணமாக நீங்கள் செய்யும் பணியின் தன்மையும், வேலைமுறைகளும் மாறக்கூடும். ஆகவே, அவற்றிக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் புதிய திறமைகளையும், நுட்பங்களையும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்தால்தான் உங்களுடைய பணியை சிறபாகவும், வாடிகைக்யாளர்களுக்கு திருப்தியளிக்கும் விதத்திலும் செய்ய முடியும். வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிதான் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி! நிறுவனத்தின் வளர்ச்சியே அதில் பணிபுரிவோரின் மகிழ்ச்சி. ஆகவே செய்யும் பணியைச் சிறப்பாகச் செய்தால் நமது வாழ்வு சிறக்கும் என்பதைப் புரிந்து கொண்டு பணியாற்றுங்கள்.

தொடர்ந்து கற்றலே தொடர் வளர்ச்சி

நீங்கள் வெற்றி பெற்றால் அதற்காக மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித்திளைப்பதும், தோற்றுப் போனால் மூலையில் முடங்கி விடுவதும் நல்ல பண்பல்ல. ஏனென்றால் வெற்றியும், தோல்வியும் வாழ்வின் அங்கம். வெற்றியையும், தோல்வியையும் சமமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். மனநிலை பக்குவப்படுதற்கு தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அதாவது உங்களுடைய ஒவ்வொரு வெற்றியையும், தோல்வியையும் பாடமாக ஏற்றுக்கொண்டு அதிலிருந்து கற்றுக்கொண்டே இருங்கள்.

தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளலாம். வெற்றியிலிருந்து எவ்வாறு கற்றுக்கொள்வது? என நீங்கள் கேட்பதை என்னால் உணர முடிகின்றது. இங்கு இரண்டு முக்கிய விசயங்களைக் கவனிக்க வேண்டும்.

அதாவது உங்களுடைய தோல்வியிலிருந்து கற்றுக்கொள்வது ஒன்று, மற்றவர்கள் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்வது இன்னொன்று. நீங்கள் வெல்லும்போது மற்றவர்கள் தோற்றுப் போய் இருக்கக்கூடும். அத்தகைய சூழ்நிலைகளில் வெற்றிக்களிப்பில் மூழ்கி விடுவதைவிட, மற்றவர்கள் ஏன் தோற்றார்கள் என்று எண்ணிப்பார்த்து அதிலிருந்தும் கற்றுக்கொண்டு தொடர்ந்து உயர வேண்டும். இதுதான் வெற்றியிலிருந்து கற்றுக்கொள்ளும் இரகசியமாகும்.

புதிய பண்பாடு

தொழில் வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்கு சில பண்பு நலன்களைப் பெற்று இருக்க வேண்டும். உங்களுடைய திறமைக்குத் தகுந்த சம்பளமும், பண்புக்குத் தகுந்த மரியாதையும், கிடைக்கும். நீங்கள் வகிக்கும் பதவி பெரியதாக இருந்தாலும், சிறியதாக, உங்களுடைய நற்பண்புகளை பொறுத்தே மற்றவர்கள் உங்களை மதிக்கின்றார்கள். ஆகவே, நற்பண்புகளின் பிறப்பிடமாகவும், உறைவிடமாகவும் நீங்கள் இருந்தால் எப்பொழுதும் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் உண்டு. மேலும், மற்றவர்களை நன்கு மதித்து, உரிய மரியாதை கொடுக்கும் பண்புடையவராகவும் நீங்கள் இருக்க வேண்டும். மனித உறவுகளை மேம்படுத்தும் பண்புகளை மென்மேலும் வளர்த்துக்கொண்டே இருங்கள். ஒவ்வொருவரிடமும் அவர்களுக்கென்று தனிப்பண்பும், சுய கௌரவமும் உள்ளது. அதை உணர்ந்து அவர்களை மதித்து பழகுங்கள். உங்களுக்கு வெற்றிப் பாதையை அமைத்துத் தருபவர்கள், உங்களுடன் பணிபுரிபவர்களே என்பதை உணர்ந்து மனித நேயத்துடன் பழகுங்கள். வெல்லுங்கள்!

சமமான மனநிலையை வளருங்கள்

அறிவின் ஆற்றலை வளர்த்துக் கொள்வதுடன் ஆரோக்கியமான மனநிலையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். மனம்போல்தான் வாழ்வு அமையும் என்பார்கள். மனம் செம்மையானால் எண்ணங்கள் தெளிவாகும். எண்ணங்கள் தெளிவானால் செயல்கள் வலுவாகவும், நேர்மையாகவும் இருக்கும். நேர்மையான செயல்கள் மகிழ்ச்சியை உண்டாக்கும். ஆம்! வாழ்வின் நோக்கமே மகிழ்ச்சியான வாழ்வதுதான்.

மற்றவர்களை, குறிப்பாக உங்களுடன் பணிபுரிவோரைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்களையும் உங்களைப் போலவே சமமாக நினைக்கின்றீர்களா? அல்லது தாழ்வாகவோ, உயர்வாகவோ நினைக்கின்றீர்களா? என சிந்தித்துப் பாருங்கள். மற்றவர்களையும் உங்களைப் போலவே சமமாக அதாவது மனிதத் தன்மைமிக்கவர்களாக நினைப்பீர்கள் என்றால் ஆரோக்கியமான மனநிலையை கொண்டிருக்கின்றீர்கள் என்று பொருள். அவ்வாறில்லாமல், உங்களைவிட உயர்வாக அதாவது மற்றவர்கள் எல்லாம் சிறந்தவர்கள் நீங்கள்தான் தாழ்ந்தவர்கள் என்று எண்ணினால் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை உண்டாகிறது. மாறாக, மற்றவர்களை எல்லாம் தாழ்வாகவும் உங்களை உயர்வாகவும் நினைத்தால் உயர்வு மனப்பான்மை (Supperiority Complex) உண்டாகிறது.

ஒருவருக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தாலும், உயர்வு மனப்பான்மை இருந்தாலும் அது அவருடைய முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் வெகுவாகப் பாதிக்கின்றது. எப்படியென்றால் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தால் மற்றவர்களிடமிருந்து தன்னிச்சையாக நீங்களே விலகிக்கொள்வதுடன், அச்ச உணர்வையும், தோல்வி மனப்பான்மையையும் நெஞ்சில் சுமக்கின்றீர்கள். அதே நேரத்தில் உயர்வு மனப்பான்மை இருக்குமென்றால், மற்றவர்களையெல்லாம் தாழ்வாக நினைத்து அவர்களை ஒதுக்கி வைத்து விடுகின்றீர்கள். ஆகவே இந்த இரு மனநிலைகளும் உங்களுடைய வெற்றிக்கும், மகிழ்ச்சியான தொழில் வாழ்க்கைக்கும் தடைகளாகும் மற்றவர்களையும் சமமாக மதித்து உள்ளன்போடு பழகும் மனப்பாங்கே சிறந்ததாகும்.

செயல்திறன் உயரட்டும்

உங்களுடைய செயல்திறனைத் தொடர்ந்து உயர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் சென்ற ஆண்டு செய்த தைவிட இந்த ஆண்டு சிறப்பாகச் செய்வேன். இந்த ஆண்டு செய்ததைவிட அடுத்த ஆண்டு மிகச்சிறப்பாகச் செயல்படுவேன் என்ற சுய உறுதிப்பாடு (Self commitment) உங்களுக்கு இருக்கவேண்டும். அப்பொழுதுதான் உங்களுடைய பணிகளை மென்மேலும் சிறப்பாகச் செய்து தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்க முடியும். அத்துடன், செய்யும் பணியைச் சிறப்பாகச் செய்வதற்குத் தேவையான திறமைகளையும், அறிவையும் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் உண்டாகும். ஆகவே எந்த வேலையையும் சிப்பாகவும், இன்னும் சிறப்பாகவும் மிகமிகச் சிறப்பாகவும் செய்ய முடியும் என்ற எண்ணத்தோடும், அவ்வாறு சிறப்பாகச் செய்ய என்னால் முடியும் என்ற நம்பிக்கையும், அதற்கு தொடர்ந்து அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற தெளிவும் உங்களுக்கு ஏற்படும்.

இவ்வாறு, உங்களுடைய உள்ளத்தில் உண்டாகும் புத்துணர்வு உங்களுடைய ஒவ்வொரு செயலிலும் மிளிர்ந்து தொடர் வெற்றியை உங்களுக்குத் தேடித்தரும். உங்களுடைய வாழ்வெல்லாம் வெற்றிக்கு இதுவே அடிப்படை ஆதாரம்! முயலுங்கள்! செய்து மகிழுங்கள்.

உள்ளத்தில் தெளிவு உண்டாகட்டும்
ஒவ்வொரு செயலிலும் ஊக்கம் மிளரட்டும்
வளர்ந்த இந்தியாவைச் செதுக்கும்
வளமான சக்தி நமதாகட்டும்


வெற்றி நிச்சயம



பூக்கள் உதிர்ந்து விழும் என்பதற்காக
மரங்கள் வருத்தப்படுவதில்லை
தென்றல் நின்று போகும் என்பதற்காக
மலர்கள் வருத்தப்படுவதில்லை
நிலவு தேய்ந்து விடும் என்பதற்காக
வானம் வருத்தப்படுவதில்லை
பிறகு ஏன் மனிதா!
நீ மட்டும் தோல்வி க்டு
துவண்டு போகிறாய்?

பெ. ஆதவன்,
11 “ஆ” பிரிவு.


தேசிய விருது பெற்ற மாணவி இளம் விஞ்ஞானி ம. சுகப்பிரியா



ஒரு நேர்முகம்

நேர்காணல் அ. மாலதி

கரூர் வாங்கல் சாலையிலுள்ள வள்ளலர் கோட்டத்தில் இயங்கிவரும் குருதேவர் மெட்ரிக் பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும் மாணவிகள் சுகப்பிரியா, யமுனா, மகேஸ்வரி சௌமியா, ஜனனி ஆகிய ஐவர் குழு தயார் செய்த அறிவியல் ஆய்வு தேசிய விருது பெற்று நமது குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களால் பாராட்டும் பெற்று வந்துள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் நடைபெற்ற 12வது தேசிய குழந்தைகள் மாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வினை சமர்பித்து விளக்கிக்கூறி விருது பெற்று வந்துள்ள இக்குழுத்தலைவி செல்வி; ம. சுகப்பிரியாவிடம் ஒரு நேர்முகம்.

நீங்கள் எதைப்பற்றி ஆய்வு செய்தீர்கள்?

2004ம் ஆண்டு அறிவியல் விழிப்புணர்வு ஆண்டாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாண்டிற்கு குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான மையக்கருத்தாக “வளமான எதிர்காலத்திற்கு நீர் ஆதாரங்களை பேணிப் பாதுக்காப்போம்” என தேசிய குழந்தைகள் அறிவியல் கழகம் அறிவித்திருந்தது. எங்கள் பள்ளியிலிருந்து 12 உப தலைப்புகளில் 12 ஆய்வுகளை மேற்கொண்டோம். ஒவ்வொரு குழுவிற்கும் 5 பேர் வீதம் ஆய்வு செய்தோம். எங்கள் குழுவில் Recycling and used water அதாவது பயன்படுத்திய நீரை மறு சுழற்சி செய்தல் என்ற ஆய்வினை மேற்கொண்டோம்.

நீங்கள் நேரிடையாக தேசிய மாநாட்டிற்குச் சென்று ஆய்வினை முன் வைத்தீர்களா?

அவ்வாறு செய்ய முடியாது. முதலில் மாவட்ட அளவில் ஒரு மாநாடு நடைபெற்றது. அதில் எங்கள் பள்ளியிலிருந்து இரண்டு ஆய்வுகள் தேர்ந்தெடுக்கபட்டன.

அடுத்து திருவண்ணாமலையில் மாநில அளவிலான மாநாடு டிசம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் எங்களது ஆய்வு மட்டும் கரூர் மாவடத்திலேயே ஒன்றாக தேசிய மாநாட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதுபோன்ற அறிவியல் ஆய்வுகள் நாங்கள் முதல் முறையாக செய்தோம். அதுவும் தேசிய அளவிலான மாநாட்டிற்கு தேர்ந்தெடுக்கபட்டது என்றவுடன் எங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சியாகும்.

மாநில மாநாட்டில் உங்களது அனுபவம் என்ன?

திருவண்ணாமலைக்குச் செல்லும் போதுதான் நான் முதன் முதலில் தொடர் வண்டியில் பயணம் செய்தேன். அதுவே எனக்கு புதிய அனுபவம். ஏனெனில் எனது ஊர் செல்லிபாளையம் என்ற ஒரு சிற்றூர். எனது பெற்றோர்கள் ஒரு குறு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நான் கரூர் மாவட்டத்தை விட்டு வெளியில் செல்வதும் இதுவே முதல் முறை.

மாநாட்டில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விதவிதமான செய்முறை மாதிரிகளை (பரிசோதனை அடிப்படையிலான ஆய்வுகளுக்கு) கொண்டு வந்திருந்தனர். நாங்களோ ஒரு பி.வி.சி., பைப், ஆற்று மணலிடை கற்கள், மணல், அடுப்புகரி போன்றவைகளைத்தான் கொண்டு வந்திருந்தோம். கூடவே சில வரைவட்டை விபரங்கள் (Charts) இவ்வளவுதான். எங்கள் முறை வந்ததும் குழுத்தலைவியான நான் ஆய்வினை விளக்கினேன். கொடுக்கபட்ட 8 நிமிடத்தில் விளக்கமும் செய்முறையும் செய்து காண்பித்துவிட வேண்டும் என்பது எங்களது திட்டம். அதன்படியே நான் விளக்கும்போது எனது குழுவினர் செய்முறையினை செய்து காண்பித்தனர்.

மறுநாள் முடிவு அறிவிக்கும் தருணம் – கரூர் மாவட்டம் எனக்கூறி விட்டு ஒரு சிறிய இடைவெளி – எந்தப் பள்ளியின் பெயர் வருமோ என்ற பேரார்வம் – பின்பு குருதேவர் பள்ளி என்ற வார்த்தைகளை கேட்ட மாத்திரத்தில் நாங்கள் எழுந்து குதித்தே விட்டோம். எங்கள் மனம் வானம் வரை எட்டி குதித்தது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு குதூகலம். இது எனது வாழ்வில் கிடைத்த முதல் சாதனை என்றே கருதினேன்.

தேசிய மாநாட்டு அனுபவங்களை கூறுங்கள்.

தமிழ்நாடு அறிவியல் கழகம் எங்களை அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்திக்கு சென்னையிலிருந்து தொடர்வண்டியில் அழைத்து சென்றது. தமிழ்நாட்டிலிருந்து 30 மாணவர்கள் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து சென்றோம். குழுத்தலைவர்கள் மட்டுமே அனுமதிக்கபட்டனர். தொடர்ந்து 3 நாட்கள் பயணம் ஒரு புதிய அனுபவம். கௌஹாத்தி செல்லும் வழியில் இதுவரை வரைபடத்தில் மட்டுமே பார்த்து படித்த இந்திய பெரு நதிகளை கங்கை, பிரம்புத்திரா நதிகளின் மீது போடப்பட்டிருந்த பாலங்களின் மேல் பயணம் செய்தபோது மிகவும் பெருமையாக இருந்தது.

கௌஹாத்தி சந்திப்பிலிருந்தே எங்களுக்கு இராணுவ பாதுகாப்பளிக்கப்பட்டது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரிசித்திப் பெற்ற காட்டன் கல்லூரியில்தான் தேசிய மாநாடு நடைபெற்றது.

முதல்நாள் தொடக்க விழாவினை அஸ்ஸாம் முதலமைச்சர் திருமிகு. தருண் கோக்கை (Tarun Gogoi) துவக்கி வைத்தார். பின்பு அந்தந்த மாநில பாரம்பரிய உடையில் நகர்வலம் வந்தோம்.

பின்பு ஆய்வுகளை சமர்பிக்கும் அமர்வுகள் தொடங்கின. எனது ஆய்வு மறுநாள்தான் பட்டியலிடபட்டது என்பதால் முதல்நாள் முழுவதும் நான் வெவ்வேறு அமர்வுகளில் பார்வையாளராக இருந்தேன். மறுநாள் 28.12.04ந் தேதி எனது ஆய்வினை சமர்பித்தேன். முடிந்ததும் பார்வையாளர்கள் பாராட்டினார்கள்.

பாரத தேசமே ஓர் இடத்தில் கூடியிருப்பது போன்றதுதான். இந்த மாநாடு. வேறு மாநிலத்திலிருந்து வந்துள்ள எங்களது மாணவர் குலம். அவர்களோடு பழகும் வாய்ப்பு எல்லாவற்றையும் விட உணவு முறையும் வித்தியாசமானது. அது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரிய உணவு பரிமாறப்பட்டது. பரிமாறுவதும் ஒவ்வொரு மாநில மாணவர்கள், புதிய ஊர், புதிய நண்பர்கள், புதிய உணவு, புதிய புதிய அனுபவங்கள் எல்லாமே புதிது. 30.12.04 மற்றொரு மறக்க முடியாத நாள்.

எங்களை ஒரு சுற்றுலாவாக கௌஹாத்தியில் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். பிரம்பாண்டமான அந்த பிரம்புத்திரா நதிக் கரையில்தான் கௌஹாத்தி நகரமே உள்ளது. பிரசித்திப்பெற்ற பிரம்புத்திராவில் புடகு சவாரி செய்தோம். பின்பு குருவா என்றொரு கிராமத்திற்குச் சென்றோம். அங்கு வாழை மட்டையால் போடபட்டிருந்த ஒரு வித்தியாசமான பந்தலில் கூடினோம். அங்கு நான் முதிய விஞ்ஞானி யஸ்பால் (Yashpal) அவர்களை சந்தித்து அறிவியல் ஐயங்களை கேட்டுத் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.

மாலையில் ஸ்ரீமந்தா சங்கரதேவா கலாசேத்ராவிற்குச் சென்றோம். அங்கு நடைபெற்ற கலைவிழாவில் அஸ்ஸாம் முதலமைச்சர் எங்களை சந்தித்து உரையாடினார்.

இச்சுற்றுலாவின் போது ஓர் ஓவியப் போட்டி வைத்தார்கள். அதற்கும் “தண்ணீர்” தான் தலைப்பு. நான் ஒரு வீடு வரைந்து சமைலறைக் கழிவு நீர், குளித்த தண்ணீர், துணி துவைத்தநீர் இவற்றை ஒரு தொட்டியில் சேகரித்து எங்களது ஆய்வின்படி மறுசுழற்சி செய்த நீரில் எனது அம்மா துணி துவைப்பது போல் வரைந்தேன். எனக்கு முதல் பரிசு கிடைத்து. பின்பு ‘ஹந்தர்மன்தர்’ என்ற அறிவியல் இதழை விற்பதற்கு போட்டி வத்தார்கள். அதிலும் அவர்கள் கொடுத்த குறுகியகாலத்தில் ரூ. 600க்கு விற்று முதலிடம் பெற்றேன். இதற்கு Best Communicator என்ற பாராட்டினை வழங்கினார்கள். அடுத்த ஆண்டு ஐதாராபாத்தில் நடைபெற உள்ள தேசிய மாநாட்டில் தொண்டாற்ற என்னை அழைத்துள்ளார்கள்.

31.12.04 இறுதிநாள். பிரிவு உபச்சார விழாவில் பரிசளிப்பு நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த 558 ஆய்வுகளுக்கு விருது வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் ஆய்வில் ஈடுபட்ட மொத்த மாணவர்கள் – 5 லட்சம் பேர்

செய்த ஆய்வுகள் ஒரு லட்சம்
தேசிய விருது பெற்றவ 558

நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த நமது குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மதியம் 2.00 மணிக்கு மேடைக்கு வந்தார்கள். எங்களோடு 1.30 மணி நேரம் பேசினார்கள். எங்களது விருதுகளைப் பாராட்டினார். அவருக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும் என்பதால் 20குழந்தைகளை முன்னால் வந்து அமரச் சொன்னார்கள். தமிழ்நாட்டின் சார்பாக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரை அருகில் பார்க்கவும் அவரோடு உரையாடவும் கைகுலுக்கவும் கிடைத்த வாய்ப்பை என்னால் என்றென்றும் மறக்க முடியாது.

இத்தனை சிறப்புகள் கிடைத்தது பற்றி….

எனது பெற்றோர்கள் மலையப்பன், குப்பாத்தாள். இருவரும் கிராமத்தில் உள்ள குறுவிவசாயிகள். படிப்பறிவற்றவர்கள். இந்த ஆய்வின் சிறப்பைப் பற்றி அறியாதவர்கள் என்ற நிலையில் என்னை ஊக்கப்படுத்தியவர்கள் எனது வழிகாட்டி ஆசிரியை செல்வி. கோகிலா அவர்களும் பள்ளி நிர்வாகமும்தான்.

இளம் விஞ்ஞானி என்ற பட்டத்தோடு எங்களது ஆய்விற்கு “Excellent Work donek என்ற சிறப்புத் தகுதியும் கிடைத்துள்ளது. எங்களது பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு நமது குடிரசுத்தலைவரின் தோழரும் ஸ்ரீ ஹரிக்கோட்டா விண்வெளி ஆய்வு மையத்தின் முதன்மை விஞ்ஞானியுமான திரு. நெல்லை சு. முத்து அவர்களும், சிந்தனையாளர் திரு.எம்.எஸ். உதமூர்த்தி அவர்களும் வந்திருந்து பாராட்டி சிறப்பித்தனர்.

இவ்வறியல் ஆய்வில் பாரத நாட்டளவில் 5 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர் இதில் ஒரு லட்சம் ஆய்வுகளில் 558 ஆய்வுகள் தேசிய விருது பெற்றன. இதில் Excellent Work done என்ற சிறப்புப்பட்டத்தோடு எங்களது ஆய்வு தேர்வு செய்யப்பட்டுள்ளுது என்பதை மகிழ்வுடனும் பெருமையுடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்களது உழைப்பிற்கும் சிறுமிகளான எங்களின் தன்னம்பிக்கைக்கும் இறையின் திருவருள் துணை நிற்க பெற்ற பரிசாக இதைக் கருதி எங்களது குருதேவர் பள்ளிக்கு மேலும் பல சிறப்புகள் கிட்டும் என்பதில் ஐயமில்லை.


தன்னம்பிக்கையும் தளராமுயற்சியும்



போலந்து நாட்டில் பிறந்த மார்ஜா என்ற பெண்மணி இரண்டுமுறை நோபல் பரிசு பெற்றவர் என்றால், யார் அந்த மார்ஜா என்று கேட்கத் தோன்றும். அதுவே நோபல் பரிசு பெற்ற பெண் யார் என்றோ… அல்லது ரேடியம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது..? என்றோ கேட்டால், மேரி க்யூரி என்று பலரும் கூறுவர். ஆம்.. மார்ஜா என்று பெற்றோரால் பெயரிடப்பட்டவர்தான் வரலாற்றில் மேரி க்யூரியாகப் புகழப்படுவர்.

இவரையும் சேர்த்து இவரது பெற்றோருக்கு ஐந்து குழந்தைகள். போலந்தை, இரசியா வென்று தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த பொழுது, கல்வியை இரசிய மொழியில்தான் கற்றுத்தர வேண்டுமென்று ஆணையிட்டது இரசிய நாடு. நாட்டுப்பற்றும் தாய்மொழிப் பற்று மிக்குடைய மார்ஜாவின் தந்தை ஆணைக்கு அடிபணிய மறுத்தா. விளைவு… ஆசிரியர் பணியை அவர் இழக்க நேர்ந்தது. வருவாய் இழப்பு அவர் குடும்பத்தை வறுமையில் தள்ளி வாட்டியது.

நோய்வாய்ப்பட்டு மூத்த சகோதி மரணம்.. பாசமிகு தாயை மார்ஜாவின் பதினோறாவது வயதில் பறிகொடுத்த துயரம். இன்னல் பலவற்றக்கிடையேயும் மார்ஜாவும் அவரது அக்கா ப்ரன்யாவும, அண்ணன் ஜோஜியாவும் பள்ளி இறுதி வகுப்புவரை படித்துத் தேறினர், முதலிடம் பிடித்து.

பாரீசு நகரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக வேண்டுமென்று ஆசைப்பட்டனர் அக்காவும் தங்கையும். பாரிசுக்கு அனுப்பி ஒருத்தியை படிக்க ஐக்ககூட வசதியில்லை தந்தைக்கு.

அக்காவை மருத்துவக்கல்லூரியில் சேர்த்து, மார்ஜா வேலைக்காரியாக வேலை செய்து, சம்பாதித்து அக்காவின் படிப்புக்கு உதவினார். பின்னர் பௌதிகப்பிரிவில் முதலாவதாகவும், தொடர்ந்து கற்று கணிதத்திலும் பட்டங்கள் பெற்றார்.

ஆராய்ச்சியில் ஆர்வமுடைய ஆசிரியராக விளங்கிய பியரி க்யூரியை மார்ஜாவாக இருந்து மேரியாக பெயர்மாற்றம் பெற்றிருந்த மேரி மணம்புரிந்து மேரி க்யூரி ஆனார்.

‘பசி நோக்கார்; கண் துஞ்சார்; கரும்மே கண்ணாயினார் என்பதற்கேற்ப, இரவென்றும் பகலென்றும் பாராமல் நான்காண்டுகள் இருவரும் சேர்ந்து செய்த ஆராய்ச்சியன் பயனாக புதிதாக இரண்டு மூலகங்களைக் கண்டுபிடித்தனர். அவற்றுக்கு போலியம் என்றும் ரேடியம் என்றும் பெயர் வைத்தனர். இந்த அரிய கண்டுபிடிப்பிற்காக மேரிக்கும் அவரது கணவர் பியரி க்யூரிக்குமாக 1903ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கபட்டது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு கணவர் ஒரு விபத்தில மரணமடைந்தார்.

ஆராய்ச்சிக்கு துணைபுரிந்த அருமைக் கணவரின் இழப்பு வேதனையைத் தந்தது என்றாலும் மேரி மனம் தளராமல் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தான் கண்டுபிடித்த ரேடியம் என்ற மூலகப் பொருளின் அடாமிக் எடையைக் கண்டுபிடித்தார். 1911 ஆம் ஆண்டில் இராசயணப் பிரிவிலும் நோபல் பரிசைப் பெற்றார்.

ரேடியத்திலிருந்து வெளிப்படும் அணுக்கதிர்களாலேயே தாக்கப்பட்டு 1934ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். மேரி கியூரியின் தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும் கொண்ட வாழ்க்கை, வரலாறு படைக்க விரும்புவோர்க்கு வழிகாட்டியாக அமையும்.


முயற்சி


இளைஞனே
நம் முயற்சிகள்
தோற்கலாம்!
நாம் முயற்சிப்பதில்
தோற்கக்கூடாது!
முயற்சி செய் – அது
பயிற்சியாக மாறும்
பயிற்சி செய் – அது
வெற்றியாக மாறும்.
- என். செல்வராஜ்
கோவை


நாமக்கல் மாவட்டம் சேந்தமங்களம் அருகில் இருக்கும் கூச்சக்கல் புதூர் என்னும் சிற்றூரில் காளியண்ணன் – சரசுவதி பெற்றிட்ட நான்காவது பிள்ளைதான் கனகராஜ்.

இது ஒரு வறிய விவசாய குடும்பம். தன் தந்தையின் முதல் மனைவிக்கு குழந்தைப்பேறு இல்லாத நிலையில், இரண்டாம் மனைவியின் கடைசி பிள்ளையே கனகராஜ்.

தாயின் அன்பை இழந்து பெரிய அன்னையால் வளர்க்கப்பட்டு இளம் வயதிலேயே அனாதை போன்ற நிலைக்கு ஆட்பட்டு, பணி,பஞ்சம், பட்டினி என்ற நிலையில், அன்பு பாசத்திற்காக ஏங்கி தவித்த நாட்களே இவன் கடந்த நாட்கள்.

இப்படி பல்வேறு துன்பங்களுக்கு ஆட்பட்டு 1993ல் பள்ளி இறுதி வகுப்பு +2 தேர்ச்சிப் பெற்றான்.

மேற்கொண்டு படிக்க வாய்ப்பு வசதி இல்லை. ஆனால் படிக்க வேண்டும். அதுவும் எம்.பி.பி.எஸ். படித்து டாக்டராக வேண்டும் என்ற மிக உயரிய இலட்சியம் மனதில் பதிந்து விட்டது, அது மெல்ல மெல்ல வளர்ந்து வெறியாக மாறியது, எப்படியும் எம்.பி.பி.எஸ் படித்தே தீருவது என்ற குறிக்கோள் கல்வெட்டாய் பதிந்து விட்டது நெஞ்சத்தில்.

குறிக்கோளும் இலட்சியமும் இருந்துவிட்டால் போதாது - பொருளாதாரம் வேண்டுமே! எங்கு செல்வது என ஏங்கி நாட்களை வீணே கழிக்கவில்லை.

1993 முதல் 1995 வரை

ஒரு லாரியில் கிளீனராக பணியாற்றினார். 1996ஆம் ஆண்டில் கடுமையான உழைப்பிற்குப்பின் ஒட்டுநர் உரிமம் பெற்று லாரி ஓட்டுநர் (டிரைவர்) ஆனார். தீயபழக்கங்கள் ஏதுமின்றி இரவு பகலாக உழைத்து பொருள் சேர்த்தார் அவர் எண்ணமெல்லாம் படிப்பு, படிப்பு! எம்.பி.பி.எஸ். டாக்டராக வேண்டும்.

6 ஆண்டுகள் உழைத்து பாடுபட்டு மார்ச் 1999 ஆம் ஆண்டு +2 இம்ப்ரூமெண்ட் தேர்வு எழுதுகிறார்.

ஆறாண்டு இடைவெளிக்குப் பிறகு அதுவும் லாரி கிளீனர் டிரைவர் தொழில்களை செய்தவர் +2க்கு உரிய பாடப்புத்தகங்களை வாங்கிக் கொண்டு தனிப் பயிற்சி மையத்தில் (டியூசன் சென்ட்டரில்) சேர்ந்து இவரையும் பகலையும் அறியாது கண்துஞ்சாமல், நான்கு மாதங்கள் புத்தகங்களை அன்றி வேறொன்றையும் அறியாதவன் ஆனார். தேர்வில் பிசிக்ஸ் 197, கெமிஸ்ட்ரி 194, உயிரியல் 194 மொத்தத்தில் அறுநூறுக்கு 585 மதிப்பெண்களைப் பெற்று நுழைவுத்தேர்வு எழுதினார். கடுமையான உழைப்பால் கலங்கிய கசங்கிய உடல்நலம் ஒத்துழையா நிலையில் நுழைவுத் தேர்வு கைக்கொடுக்கவில்லை. 8 மதிப்பெண் குறைந்த நிலையில் மீண்டும் 2000த்தில் நுழைவுத் தேர்வு. அந்த ஆண்டும் 1.51 மதிப்பெண் இடைவெளி.

2001 விடாமுயற்சியாக கொண்ட குறிக்கோளை வென்றெடுத்தே தீருவது என்ற நிலையில் பொருள் சேர்க்க மீண்டும் ஆறுமாதங்கள் லாரி டிரைவராக பணியாற்றி பொருள் சேர்த்துக் கொண்டு 4 மாதங்கள் தேர்வுக்கு தயாரித்துக் கொண்டு 2001-ல் நுழைவுத்தேர்வு 291.77/300 மதிப்பெண்கள்.

முதல் பட்டியலில் மருத்துக் கல்வியில் இடம் கிடைக்காத நிலை. ஏமாற்றம், வாழ்க்கையே போய்விட்டதென அழுகை, இனியென்ன அனைத்தும் போய்விட்டதே என்ற நிலையில் 60 நாட்களுக்குப் பிறகு ஒளிப் பிறந்தது.

28.09.2001ல் கடிதம் வந்தது.

30.09.2001ல் 26ஆம் வயதில் தூத்துகுடி மருத்துவக்கல்லூரி மாணவர்!

இடையில் நிகழ்ந்தவை…

அடுத்த இதழில்……





No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.